தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமை பெற 40 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, கமல்ஹாசனும் ஒரு கோடியும், நடிகர் விஜய் ஒரு கோடியும் நிதியுதவி வழங்கினர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், தற்போது நடிகர் நெப்போலியன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 – 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன், சங்க கட்டிட வளர்ச்சிக்காக தற்போது ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாய் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்துகளை கூறி நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 22ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கின. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.