கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை காதலிப்பதாக தெரிவித்து அவர்களை நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.
கடந்த 2020 ஆம் வருடம் சென்னையில் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் காசியின் மீது பாலியல் மற்றும் பணமோசடி புகாரை வழங்கினார். அதன் அடிப்படையில், காசி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நடத்திய விசாரணையில் பொருளாதாரத்தில் வசதியான இளம் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்வதாக தெரிவித்து வன்கொடுமை செய்து வந்தார் காசி என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் ரகசிய கேமராவை வைத்து பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோக்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். சுமார் 900 ஜிபி அளவுக்கு அவரிடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார். சிறுமிகளும், திருமணம் ஆன பெண்களும் இவருடைய வலையில் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களும் இவரால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கடந்த 2020 ஆம் வருடம் முதலே காசி சிறையில் இருந்து வருகிறார்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர். போக்சோ, கந்துவட்டி, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டு வந்தது. இத்தகைய நிலையில் தான் காசியின் செல்போன் மடிக்கணினி உள்ளிட்டவற்றில் இருந்த ஆபாச புகைப்படங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் ஜாமினில் வெளியே வந்தார். நாகர்கோவில் காசி குறித்த வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு வழங்கினார் அதில் காசிக்கு சாகும் வரையில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.