சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், கடைகள், சிறு வியாபார கடைகள், உணவகங்கள் என பலரும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தான், கடைகளின் பெயரை தமிழில் எழுதி பெயர் பலகையாக வைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், பெரும்பாலும் தங்கள் கடைகளில் பெயர் பலகைகளை ஆங்கிலத்திலேயே வைத்திருக்கின்றன. இவற்றை தமிழில் மாற்றி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அவற்றை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் தற்போது 70,000 கடைகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், 7 நாட்களுக்குள் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால், கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கடைகளின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.