இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை குறுவை பயிர்க் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும் தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு என்பதை விட இல்லை என்ற நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது என்றால் அதற்கு எவரும் மாற்றுக் கருத்து தெரிவிக்க முடியாது எனவும், போதைப் பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி எளிதாகப் போதைப் பொருட்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டாகவும், சான்றாகவும் இப்பத்தாகத் தெரிவித்த அவர், இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருப்பதாகக் கூறினார்.