ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.. அதன்படி தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன.
என்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை முறையே நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தெலுங்கானாவில் பிஆர்எஸ் உட்பட பல அரசியல் கட்சிகளின் மாநிலக் கட்சி அந்தஸ்தையும் ரத்து செய்தது.. அதே நேரம் நாகாலாந்தில் லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது..
தேசிய அந்தஸ்து கொண்ட அரசியல் கட்சிகளின் பட்டியல்:
- பாரதிய ஜனதா கட்சி (BJP)
- இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்)
- பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
- தேசிய மக்கள் கட்சி (NPP)
- ஆம் ஆத்மி கட்சி
டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தனது தேர்தல் செயல்பாட்டின் அடிப்படையில் ஆம் ஆத்மி ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சரும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் எங்களை இந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மக்கள் எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். இன்று மக்கள் இந்த மிகப்பெரிய பொறுப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
உத்தரபிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி), ஆந்திராவில் பாரதிய ராஷ்டிரிய சங்கம் (பிஆர்எஸ்), மணிப்பூரில் பிடிஏ, புதுச்சேரியில் பிஎம்கே, மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்பி மற்றும் மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தையும் தேர்தல் குழு ரத்து செய்தது. நாகாலாந்தில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மேகாலயாவில் மக்கள் கட்சியின் குரல் மற்றும் திரிபுராவில் திப்ரா மோதா ஆகிய கட்சிகளுக்கு”அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி” அந்தஸ்தையும் வழங்கியது.
தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்குகிறது. லோக்சபா அல்லது மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் ஏதேனும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவான வாக்குகளில் குறைந்தது 6 சதவீதத்தை கட்சி பெற வேண்டும். எந்த ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களில் இருந்து லோக்சபாவில் குறைந்தபட்சம் 4 இடங்களையாவது கட்சி வெல்ல வேண்டும். குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து லோக்சபாவில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களை கட்சி வெல்ல வேண்டும். கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..