நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும். துர்க்கை எப்படி துக்கங்களை போக்கி, தைரியத்தை தரக் கூடியவளோ, அதே போல் மகாலட்சுமி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நலன்களையும் அருளக் கூடியவள். மகாலட்சுமி என்றதும் செல்வத்தை தரும் தெய்வம் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மகாலட்சுமி என்பவள் மனநிம்மதியையும், வாழ்க்கையிலும், தோற்றத்திலும் மலர்ச்சியை தரக் கூடியவள்.
நவராத்திரியின் 4, 5,6 ஆகிய மூன்று நாட்களுமே மகாலட்சுமிக்கு உரிய நாட்கள் என்பதால் வரலட்சுமி பூஜை அன்று பூஜை செய்ய தவறியவர்கள் இந்த நாளில் மகாலட்சுமிக்கு விரதம் இருந்து நோன்பு வைத்து, பூஜை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். மகாலட்சுமிக்கு விருப்பமான விஷயங்களை இந்த நாட்களில் செய்வதால் மகாலட்சுமியின் அருள் எப்போதும் நம்முடைய வாழ்வில் நிலைத்திருக்கும்.
செல்வத்தை நாம் பெறுவதற்கு முதலில் தெய்வத்தின் அருள் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். தெய்வம் நம்மிடம் எதிர்பார்ப்பது பொன், பொருள், ஆடம்பரமான பூஜை என எதுவும் கிடையாது. உண்மையான தூய அன்பு, பக்தி மட்டுமே. அது மட்டும் இருந்தால் தெய்வத்தின் அருளுக்கு பஞ்சமே இருக்காது என்பார்கள்.
நினைத்த மாத்திரத்தில் பக்தர்கள் கேட்மாலேயே அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தந்து அருளக் கூடியவள் மகாலட்சுமி. மகாலட்சுமி மட்டுமல்ல அஷ்டலட்சுமிகளின் அருளும் நமக்கு வேண்டும். அதற்கு நவராத்திரியின் 4 ,5 மற்றும் 6 ஆகிய நாட்களில் மகாலட்சுமியை மனதார வழிபட வேண்டும். முடிந்தால் இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாள் விளக்கு பூஜை செய்வது சிறப்பு. வரலட்சுமி பூஜை அன்று பூஜை செய்ய தவறியவர்கள் இந்த 3 நாட்களில் வரலட்சுமி பூஜையை செய்து பலனடையலாம்.
நவராத்திரியின் 4 ம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரித்து வழிபட வேண்டும். இந்த நாளில் படிக்கட்டு வகையிலான கோலம் அமைக்க வேண்டும். மலர் வகையில் ஜாதிமல்லியும், இலை வகைகளில் கதிர்பச்சையும் கொண்டு அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக கதம்ப சாதமும், சுண்டலில் பட்டாணி சுண்டலும், பழ வகைகளில் கொய்யா பழமும் படைத்து வழிபடலாம். இந்த நாளில் பைரவி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும். நிறங்களில் கருநீல நிறத்திலான வஸ்திரத்தை அன்னைக்கு அணிவிக்க வேண்டும்.
நவ துர்க்கைகளில் நவராத்திரியின் 4 ம் நாளில் கூஷ்மாண்டா தேவியை வழிபட வேண்டும். சிங்கத்தின் மீது பவனி வரும் இவளே உலகம் முழுவதையும் படைத்ததாக சொல்லப்படுகிறது. இவளை மஞ்சள் நிறம் அல்லது அடர்நீல நிறத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபட வேண்டும். இவள் தன்னை வழிபடும் பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கக் கூடியவள் ஆவாள்.