Navratri 7th day: நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் ஞானத்தை வழங்கக் கூடிய கலைகளின் தெய்வமான சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். சரஸ்வதி தேவிக்கு தனியாக கோவில்கள், வழிபாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது அனைவரும் சரஸ்வதியை வழிபட வேண்டும் என்பதற்காக நவராத்திரியின் நிறைவு நாளில் சரஸ்வதியை பூஜை செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது.
நவராத்திரி விழா கிட்டதட்ட நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் அம்பிகையை துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமியாகவும் வழிபட்டு முடித்த பிறகு, மூன்றாக வழிபட வேண்டியது சரஸ்வதி தேவியை. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கான காலமாகும். பள்ளி, கல்லூரிக்கு சென்று படிப்பவர்களுக்கு தானே சரஸ்வதியின் அருள் வேண்டும்? நாம் படித்து முடித்து விட்ட பிறகு நாம் எதற்காக சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும் என பல நினைக்கலாம்.
சரஸ்வதி படிப்பிற்கு உரிய தெய்வம் மட்டுமல்ல. அவள் ஞானத்தை வழங்கக் கூடியவள். வாக்கு, பேச்சிற்குரிய தெய்வமாகவும் வழிபடப்படுபவள். அதனால் தான் சரஸ்வதி தேவிக்கு வாக்தேவி, ஞானவாணி என்ற பெயர்களும் உண்டு. சரஸ்வதி தேவிக்கு மிக சில இடங்களில் மட்டுமே கோவிலும், சன்னதியும் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஆனால் கிராமங்களிலும் கூட சரஸ்வதிக்கு வழிபாடு உண்டு என்பது பலருக்கும் தெரியாது.
கிராமங்களில் பேச்சியம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவது சரஸ்வதி தேவியை தான். பேச்சிற்குரிய அம்மன் என்பதால் இவளுக்கு பேச்சியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. நம்முடைய பேச்சு நல்லதாகவும், நன்மை தருவதாகவும் அமைவதற்கு கலைவாணியின் அருள் வாழ்நாள் முழுவதும் அனைவரும் வேண்டும். நவராத்திரியின் 7ம் நாளில் சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமான் சாம்பு என்ற திருநாமத்தால் துதிக்கப்படுபவர். சாம்புவின் மனைவி சாம்பவி ஆகிறாள். எனவே, நவராத்திரி 7ம் நாளில் அம்பாளை சாம்பவி என்ற பெயரில் அழைக்கிறோம். மேலும் சாம்பவி என்னும் திருநாமத்துக்கு, உதவிகரமானவள், அன்பானவள், கருணையுள்ளம் கொண்டவள் என்னும் பொருள்களைக் கூறுகின்றன சாஸ்திரங்கள்.
7ம் நாளில் மலர்களால் சங்கு வடிவ கோலமிட்டு, தாழம்பூ, தும்பை இலை வைத்து, எலுமிச்சை சாதத்துடன் கூடிய நைவேத்தியம் செய்து, கொண்டைக்கடலை சுண்டல் பேரீச்சம் பழம் உள்ளிட்டவைகளை படைத்து அம்மனை வழிபடலாம். நவராத்திரியின் 7 ம் நாளில் அம்பிகையை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். தீய குணங்கள் நீங்கும், துர்சக்திகள் நெருங்காது, மனம் வலிமை அடையும், தைரியம் உண்டாகும், அறியாமை நம்மை விட்டு நீங்கும்.
Readmore: ஈரானை அழிக்க இதுவே சரியான நேரம்!. தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்!.