Mohammed Shami: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி ஐபிஎல்(IPL 2024) போட்டி தொடர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் 17 வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் முகமது சமி.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 11 போட்டிகளில் விளையாடிய இவர் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கிய கௌரவித்தது.
உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார் முகமது சமி. அவரது கணுக்கால் காயத்திற்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் லண்டன் சென்றார். இதற்கான பிரத்தியேக ஊசி எடுத்துக்கொண்ட பிறகு மூன்று மாதங்களில் பயிற்சியில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் முகமது சமிக்கு வலி குறையவில்லை.
இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்வது தான் ஒரே தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற நிலையில் தற்போது மற்றொரு முக்கிய வீரரான முகம்மது சமி காயம் காரணமாக விலகுவது குஜராத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாட்டு 28 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.