விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 17 வயது மாணவனை கூட்டிக் கொண்டு ஓடிய 33 வயது இளம் பெண்ணை காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மகாலட்சுமி(33). இவர் அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்ற மகாலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த கணவர் கார்த்திக் தாட்கோ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மகாலட்சுமி வேலை செய்து வந்த அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த 17 வயது சிறுவனும் மாயமாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் விசாரித்த காவல்துறை மகாலட்சுமி மற்றும் அந்த சிறுவன் கன்னியாகுமரி சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
கன்னியாகுமரி விரைந்த விருதுநகர் போலீசார் அந்த சிறுவனையும் மகாலட்சுமியையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மகாலட்சுமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.