குவைத், ஓமன் நாடுகளுக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 30 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் மற்றும் உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் போன்றவை குவைத் நாட்டில் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஓமன் நாட்டில் காஸ்டிங், இன்ஸ்பெக்ஷன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 ஆண்டு அனுபவம் உள்ள 22 – 25 வயதுக்கு உட்பட்ட 162 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 60 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ள டிப்ளமோ எலக்ட்ரிக்கல், மெக்கானிக் மற்றும் ஐ.டி.ஐ. பிட்டர், டர்னர், வெல்டர் படித்த ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் மற்றும் உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் போன்றவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் omce80@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை பெற 044-22505886, 22502267 என்ற தொலைபேசியிலும், 95662-39685 என்ற வாட்ஸ்-அப்பிலும் தொடர்பு கொள்ளலாம். இது அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் இடைத்தரகரோ, ஏஜெண்டுகளோ இல்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஓமன் நாட்டுக்கு பணிபுரிய செல்பவர்கள் விசா கிடைத்த பின்பு இந்நிறுவனத்துக்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 செலுத்த வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.