நீட் தேர்வில் இருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நீட் இளநிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, நீட் தேர்வை முழுவதுமாக ஒழிக்க எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என்று சேலத்தை சேர்ந்த மாணவரின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க ஆளுநர், நீட் தேர்வு தேவை என்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படித்தால் நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். பள்ளிகளில் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து ஒரு போதும் விலக்கு தர முடியாது. அதற்கு எப்போதும் தடை விதிக்க முடியாது.
இந்த விவகாரம் பொது பட்டியலில் உள்ளதால், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்குப் பின்னரே அதிக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.