எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பயிற்சிக்கான கட் ஆப் தேதி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு வாரியம் (NBE) முதுநிலை நீட் (NEET-PG) 2023க்கான தேதிகளை வெளியிட்டது. இன்டர்ன்ஷிப்பை முடிப்பதற்கான கட்-ஆஃப் தேதிகளையும் வெளியிட்டது. அந்தவகையில் தேர்வு மார்ச் 5ஆம் தேதியும், இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி மார்ச் 31ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 50% மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தகுதி நீக்கம் அடைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். கொரோனாவுக்குப் பிறகு சேர்க்கை தேதிகளை முறைப்படுத்த தேர்வு வாரியம் முயற்சித்து வருகிறது. அந்தவகையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும், மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரோஹன் கிருஷ்ணன் கூறுகையில், “தற்போதைய கட்-ஆப் தேதி 2017ஆம் ஆண்டு பேட்ச் எம்பிபிஎஸ் மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தகுதியற்றவர்களாக மாற்றுகிறது. எனவே, இன்டர்ன்ஷிப் கட்-ஆப் தேதியை நீட்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், எம்பிபிஎஸ் இன்டர்ஷிப்புக்கான கட் ஆப் தேதியை ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தகுதி பெறாத 13,000 எம்பிபிஎஸ் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.