மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் மாணவனின் கை, முழங்கை வரை வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலசேரியை சேர்ந்தவர் மாணவன் சுல்தான் சித்திக். இவர் நண்பர்களுடன் விளையாடும் போது கையில் அடிபட்டுள்ளது. வலி மிகுதியால் அருகில் உள்ள தலசேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சென்று பார்க்கும் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது. ஆனால், மாலையில் எலும்பு முறிவு மருத்துவர் மருத்துவமனையில் இல்லை என்பதால் மற்றொரு மருத்துவர் மாணவனுக்கு உடைந்த எலும்புகளுக்கு முதலுதவி செய்து கட்டுப்போட்டுள்ளார்.

பின்னர், மறுநாள் மருத்துவமனைக்கு வந்த எலும்பு மருத்துவர் பிச்சு மோன் பரிந்துரையின் பேரில் அந்த மாணவனுக்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு மாணவன் கையில் கடும் வலி இருந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட வலி என்று முதலில் நினைத்துள்ளார். தொடர்ந்து வலி இருந்ததை அடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வலி தொடர்ந்து இருந்ததால் அவர் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த கையில் ரத்த ஓட்டம் நின்று, அழுகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

உடனே சித்திக்கை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மாணவனின் முழங்கை வரை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளார். தவறான சிகிச்சை கொடுத்த தலசேரி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர் கேரள முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், மனித உரிமைகள் ஆணையம் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.