உடற்கூராய்வு அறிக்கை அடிப்படையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை முடிவுக்கு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச் சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல் வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 4-ம் தேதி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு, அவர் திருநெல்வேலி எஸ்.பிக்கு எழுதிய கடிதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக மருமகனுக்கு எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில், நாங்குநேரி தொகுதிகாங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக் குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு 15 தினங்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தற்கொலையல்ல என பிரேதபரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது. ஏற்கெனவே இறந்த உடலை எரித்தால் மட்டுமே குரல்வளை முற்றிலுமாக எரியும் என உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை முடிவுக்கு வந்தது. தற்பொழுது உடற்கூராய்வு அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.