விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த மாணவி நேத்ராவும் ஒருவர். இவர் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் குளறுபடியால் மாணவி நேத்ரா சென்னை அழைத்து வரப்படவில்லை. இது தொடர்பான செய்தி வைரலானது. இதனையடுத்து, மாணவியை சென்னை அழைத்துச் சென்று நடிகர் விஜய்யிடம் பரிசு பெற்றுத் தருவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.