பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், தற்போது செயல்பட்டு வரும் மீனாம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், பெங்களூருவிலும், ஹைதராபாத் நகரின் பேகும்பேட்டிலும் உள்ள எச்ஏஎல் போன்று தனியார் ஜெட்களுக்காக மீனாம்பாக்கம் விமான நிலையம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அல்லது மூடவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், அரசு நினைத்தால் இரண்டு விமான நிலையங்களையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கவும் முடியும்.
பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான கொள்கையில் ஏற்கனவே ஒரு விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் மற்றொரு பசுமை வழி விமான நிலையம் அமைக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதுபோன்ற ஒரு சூழ்நிலை வந்தால், புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்துக்கு என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ஆய்வு செய்த பிறகே அரசு முடிவு செய்யும் என்று அந்த கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் அனைத்து செயல்பாடுகளும் பரந்தூரில் அமையும் புதிய விமான நிலையத்துக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மீனம்பாக்கம் விமான நிலையம் பைலட் பயிற்சி அளிக்கவும், பிஸினஸ் ஜெட்களை கையாளவும் பயன்படுத்தப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.