கார் காலம் வந்தாலே கார் விற்பனை புதிய மைல்கல்லை எட்டும். வாடிக்கையாளர்கள் மத்தியிலும் கார் வாங்குவது குறித்த யோசனை மழைக்காலத்தில்தான் அதிகரிக்கும். கூடவே, பண்டிகைகளும் வருவதால், கார் உற்பத்தியாளர்கள் தள்ளுபடி அறிவிப்புகளுடன் போட்டியில் குதிப்பார்கள். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நவராத்திரி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப கார்களை வழங்க முடியாத அளவுக்கு முன்பதிவுகளும் உச்சம் தொடும். இந்தியாவில் இந்த சீசனில் சுமார் 10 லட்சம் எண்ணிக்கையிலான கார் விற்பனை சந்தையை குறிவைத்து, கார் நிறுவனங்களும் வஞ்சனையின்றி தள்ளுபடி வழங்க முன் வந்துள்ளனர். இந்த கவர்ச்சிகரமான சலுகைகளில் ரொக்க தள்ளுபடிகள், பழைய வாகனத்தின் பரிமாற்றம், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவையும் அடங்கும்.
இந்த பண்டிகை சலுகைகள் முதல்கட்டமாக அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அறிவித்திருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகக் கூடும். ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்கள் இந்த தள்ளுபடியில் முன்னிலை வகிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ மற்றும் எஸ் பிரஸ்ஸோ ஆகியவற்றில் ரூ.61,000 வரை தள்ளுபடி அறிவிப்பாகி இருக்கிறது. ஸ்விஃப்ட் காருக்கு ரூ.54,000 மதிப்புள்ள சலுகையை மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் பல்வேறு மாடல்களுக்கும் ரூ.10,000 – ரூ.2,00,000 வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது. கிராண்ட் ஐ10 காருக்கு ரூ.43,000 தள்ளுபடியை வழங்குகிறது. ஆரா கார் ரூ.33,000 தள்ளுபடியுடன் வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ரகமான கோனா கார் ரூ.2,00,000 தள்ளுபடியுடன் வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார்களில் எக்ஸ்யூவி 300 ரக கார்களுக்கு ரூ.90,000 வரையிலும், எலெக்ட்ரிக் ரகமான எக்ஸ்யூவி 400 ரக கார்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் தள்ளுபடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது. பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவை முறையே ரூ.70,000 மற்றும் ரூ.50,000 தள்ளுபடியை பெறுகின்றன. டொயோட்டா ஹிலக்ஸ், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ், ஃபோக்ஸ்வேகனின் டிகுவான், ஜீப் மெரிடியன் மற்றும் காம்பஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி எலெக்ட்ரிக் ரகமான இஸட்எஸ் போன்ற பிற எஸ்யூவி சொகுசு ரகங்களுக்கு ஒரு லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.