கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை 400 மீட்டர் தூரத்திற்கு நடை மேம்பாலம் அமைகிறது. தொடர்ந்து சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய காலநிலை பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.