Immigration bill: குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மசோதா தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில், ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025’, அறிமுகமானது. இதன்படி, போலி பாஸ்போர்ட், விசாவுடன் இந்தியாவுக்குள் நுழைவது, தங்குவது போன்ற குற்றங்களுக்கு, 7 ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இதுபோல, பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தால், 7 ஆண்டு சிறை, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பல்கலை கழகங்கள், மருத்துவமனைகளில் வெளிநாட்டினர் வருகை பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர் அடிக்கடி வந்து செல்லும் இடங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு இந்த மசோதா வழங்குகிறது.
இந்த மசோதா, மக்களவையில் கடந்த 27ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து ராஜ்யசபாவில் இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறியதால், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த மசோதா தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போதுள்ள, ‘பாஸ்போர்ட் சட்டம் 1920’, ‘வெளிநாட்டினர் பதிவு சட்டம் 1939’, ‘வெளிநாட்டினர் சட்டம் 1946’, ‘குடியேற்ற சட்டம் 2000’ ஆகிய நான்கு சட்டங்களும காலாவதியாகும். இந்த மசோதாவின்படி, போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தி இந்தியாவில் நுழைவது அல்லது தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.