தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் தென் தமிழகம் என அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியே தமிழகத்தில் இந்த மழை பொழிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளை 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.