இன்று அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. அவர் ஏற்கனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். ”நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்ததில்லை. எனது மக்கள் நல இயக்கத்தின் மூலம் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே இருப்பேன். ஒரு வேளை வரும் காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.