அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவுகளைப் பொறுத்தவரை, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில நடைமுறைகளை ஆய்வு செய்து, கருத்துகளைக் கேட்டு, புதிய நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிட இருக்கிறோம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பதிவுத் துறை நடைமுறைகள், சேவைகள் தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 திட்டம் குறித்து விரிவாக விவரித்தார். ஆள்மாறாட்டத்தை ஒழிக்க ஆதார் தரவுடன் விரல் ரேகை, கருவிழிப் படலம் சரி பார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மையக் கணினியில் ஆவணங்களைத் திருத்தம் செய்ய முடியாத வகைையில் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப வசதி உருவாக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
வழிகாட்டி மதிப்பு : பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் குறைந்த பதிவுக் கட்டணம், வழிகாட்டி மதிப்பு உள்ளதாக கூறிய அமைச்சர் மூர்த்தி, விரைவில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
நில மதிப்பு : அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவு குறித்து பேசிய அவர், பெங்களூருவில் தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை. வழிகாட்டி மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. கிராமங்களில் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.21 முதல் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இனி குறைந்தது சதுர அடி ரூ.50 என்ற அளவில் நில வழிகாட்டி மதிப்பு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுக்குமாடி பதிவு : அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவுகளைப் பொறுத்தவரை, கர்நாடாகா உள்ளிட்ட பிற மாநில நடைமுறைகளை ஆய்வு செய்து, கருத்துகளைக் கேட்டு, புதிய நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிட இருக்கிறோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.