எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்..
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதோடு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முறையிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தது.. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஆர்.எஸ். பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது..
இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் மனு ஒன்றை ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.. சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியது உலக வங்கி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது என்று அந்த மனுவில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்..
மேலும், எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலால், அரசு ஒப்பந்தங்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.. சாலை திட்டங்களுக்கான குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் எல்லாம், குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக கொடுக்கப்பட்டதாகவும் அது எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமானவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்பதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது..