இந்திய ஐடி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது அமெரிக்கா பொருளாதாரத்தின் மீது இருந்த ரெசிஷன் அச்சம் குறைந்து காணப்பட்டாலும், ஐடி நிறுவனங்களின் வர்த்தக நிலைமை சரியாகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. கொரோனா தொற்று காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கான சிறிய திட்டங்களை பெற்றது. ஐடி நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கும் வர்த்தகத்திற்கும் பெரிய திட்டங்கள் அதாவது 500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய திட்டங்கள் முக்கியம்.
இதேவேளையில் சிறிய திட்டங்கள் 100 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன டாலர் வரையிலான திட்டங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். காரணம் சிறிய திட்டங்கள் மூலம் அதிகப்படியான லாபம் கிடைப்பதை தாண்டி அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்து பல துறையிலும், தொழில்நுட்பத்திலும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். தற்போதைய சந்தை நிலவரத்தின் படி சில பல பெரிய ஐடி சேவை திட்டங்கள் இருந்தாலும், சிறிய திட்டங்கள் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மந்தமான வருவாய், லாபத்தை பதிவி செய்யும் நிலை உள்ளது என சந்தை கணிப்புகள் கூறுகிறது.
நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை பாதுகாப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படும் வேளையில், ஐடி சேவை மேம்பாட்டிற்காக முதலீடு செய்யும் அளவுக்கு நிதிநிலை இல்லாத காரணத்தால் சிறிய ஐடி சேவை திட்டங்கள் இல்லை. பல நேரம் பெரிய நிறுவனங்களும் சிறிய ஐடி சேவையை தனியாக அவுட்சோர்ஸ் செய்யும், ஆனால் தற்போது பெரிய திட்டத்துடன் இணைத்து கொடுப்பதை ஒத்திவைக்கிறது. இது இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் ஊழியர்களை நேரடியாக பாதிக்காது. உதாரணமாக சம்பள உயர்வு, வேரியபிள் பே, புதிதாக சேரும் ஊழியரின் சம்பள பேகேஜ்-ல் பாதிக்கும்.