மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், இந்த தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டுக்குரியது.
அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்ப இருக்கிறது.
பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு, நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தி வரும் நிலையில், இந்த பணத்தையும் வங்கிக் கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்தவித சிரமும் இருக்காது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.