இந்தியாவில் தற்போது 3 வகை காய்ச்சல் பரவி வருகிறது.. நாடு முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பதிவாகி உள்ளது.. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். H3N2 வைரஸால் நாட்டில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் அடினோவைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில், இந்த வைரஸின் அதிகபட்ச பாதிப்பு இதுவரை பதிவாகியுள்ளன. இந்தக் காய்ச்சலால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதே போல் நாட்டில் தற்போது கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது..

இந்த மூன்றுமே வைரஸ் காய்ச்சல் தான். அதனால்தான் இந்த 3 காய்ச்சலின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது, கொரோனா வைரஸை போன்றே, H3N2 வைரஸ் பாதிப்பிலும் தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.. மேலும் கொரோனா, H3N2 வைரஸ் இரண்டும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.. இரண்டுமே நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே கைகளை கழுவுவது நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்..
இந்நிலையில் KRIVIDA Trivus என்ற புதிய RT-qPCR பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் வழங்கி உள்ளது.. சென்னையை தளமாகக் கொண்ட KRIYA மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த சோதனைக் கருவி, காய்ச்சல் H1N1, H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், கொரோனா வைரஸ் மற்றும் சுவாச தொற்று வைரஸ் ஆகியவற்றை கண்டறிய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாட்டின் பல பகுதிகளிலும் இந்த வைரஸ்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வரும் நிலையில், KRIVIDA Trivus சோதனை கருவிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

KRIVIDA Trivus பரிசோதனை கருவி, இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2 மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் ஆகியவற்றை 27 நிமிடங்களுக்குள் வேறுபடுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் உடனடி சிகிச்சையை தொடங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரகடத்தில் உள்ள கிரியாவின் அதிநவீன உற்பத்தி ஆலையில் இந்த சோதனைக் கருவி தயாரிக்கப்படும் என்றூம், இது விரைவில் நாடு முழுவதும் வணிக ரீதியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனேவில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்தில், 225 பாசிட்டிவ் மாதிரிகள் மற்றும் 85 நெகட்டிவ் மாதிரிகளைப் பயன்படுத்தி இந்த கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பீடு செய்தது. KRIVIDA Trivus கருவியின் ஒட்டுமொத்த உணர்திறன் 99.11 சதவீதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…