புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா நம்முடன் தான் இருக்கும், தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும் காய்ச்சல் வருவது சாதரணமானது. எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும். 3 ஆண்டுகள் ஆனாலும் உலகளவில் கொரோனா தொற்று குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது என்று என்று கூறிய அவர், அடுத்த பெருந்தொற்று எப்படி வரும் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
உலகளவில் 27 வகையான வைரஸ்கள் இருப்பதால், எதிர்காலத்தில் புது வித பாதிப்பு ஏற்படும் என்றும் அதை எதிர்கொள்ள தடுப்பூசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த வகை வைரஸ்களில் இருந்து எப்போது வேண்டும் என்றாலும் ஒரு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவலாம். எனவே அதற்கு ஒரு தயார்நிலைக்கான திட்டம் தேவை. சர்வதேச அளவில் இதற்கு ஒரே மாதிரியான ஒப்பந்தத்தை முன்னெடுக்க உலக சுகாதாரம் பணியாற்றி வருகிறது என்று சௌமியா கூறினார்.
மேலும் தற்போது, அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதால் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை. காய்ச்சல் , ஜூரம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது என்றும் எதிர்கால தொற்றுக்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். சார்ஸ் கோவ் -2 வைரஸ்கள் கூட எப்போது வேண்டும் ஆனாலும் மாறலாம். நிறைய வேரியண்ட்கள் உள்ளன. ஒமைக்ரான் வகை கொரோனா தான் உலக அளவில் அதிகமாக உள்ளது. மாஸ்க் போடாமல் இருமினால் எந்த நோயாக இருந்தாலும் பரவ வாய்ப்புள்ளது. மாஸ்க் போடுவது சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸ்கள் பரவுவதை தடுக்க உதவும். எனவே மாஸ்க் போடுவதை ஒரு பழக்கமாக கொள்வது நல்லதுதான். குறிப்பாக சில இணைநோய்கள் இருப்பவர்கள் மாஸ்க் அணிந்து வெளியில் செல்வது நல்லது என்றும் சௌமியா கூறினார்.