தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே சிரமப்பட்டனர். குறிப்பாக, பள்ளி மாணவ – மாணவிகள் வெயிலில் இருந்து தப்பித்து பாதுகாப்புடன் இருக்க கோடை விடுமுறை நாட்களும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
அதேபோல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதலே கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கள், வடபழனி, பல்லாவரம், குன்றத்தூர், எழும்பூர், கோயம்பேடு, அம்பத்தூர், விருகம்பாக்கம், கே.கே.நகர், ஆழ்வார்பேட்டை, கொரட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என்று கூறியுள்ளது. வருகிற 21ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.