சர்வதேச மியூசிக் ஸ்ட்ரீமிங்க் நிறுவனமான ஸ்பாட்டிபை (Spotify) நிறுவனம் 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால், உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்தன. அந்த வரிசையில் தற்போது ஸ்பாட்டிபை நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நிர்வாக மறுசீரமைப்பு காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுவதாக ஸ்பாட்டிபை நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தம் 9,800 பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். பணிநீக்கம் குறித்து ஸ்பாட்டிபை நிறுவனத்தின் சிஇஒ டேனியல் எக் ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘செலவினங்களை முறைப்படுத்த பணிநீக்க நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது. இந்த முடிவு மிக கடினமானது. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.