ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை குறித்து தெளிவுபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகள் தோறும் சிறப்பு பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஒரே நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே வரி என பல்வேறு திட்டங்கள் இதன் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரே நாடு முழக்கம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்துவிடும் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
இருப்பினும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து ஆராய குழு அமைத்து அதனை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இந்த அடையாள எண் உருவாக்கப்படவுள்ளது.
தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு ( Automated Permanent Academic Account Registry – APAAR) என்ற பெயரிலான இந்த ஒரே அடையாள எண், மாணவர்களின் கல்வி பயணங்களை கண்காணிக்கும் வாழ்நாள் அடையாளமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆதார் போலவே 12 இலக்க எண்களைக் கொண்டு மாணவர்களுக்கான அடையாள சான்றாக அபார் இருக்கும் எனவும், ஆனால் எந்த வகையிலும் ஆதாருக்கு மாற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி முடிவு வரை மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் பெறும் மதிப்பெண்கள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள், விளையாட்டு போட்டிகளில் புரிந்த சாதனைகள் என அனைத்து விவரங்களும் அபாரில் பதிவாகிவிடும். இந்த தனி அடையாள எண்ணில், மாணவர்களின் உயரம், எடை மற்றும் இரத்த வகை உள்ளிட்ட மருத்துவ தரவுகளும் இடம்பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர்களின் ஒப்புதலுடன் மட்டுமே ஒவ்வொரு மாணவரின் ஆதார் எண் அடிப்படையில், மாணவர்களின் தனி அடையாள எண்ணை கல்வி அமைச்சகம் உருவாக்கும் என மத்திய கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் தரவுகள் ரகசியமாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கல்வி இடைநின்ற மாணவர்களை கண்டுபிடிக்க முடியும் என்றும், ஒரு மாணவன் மற்றொரு பள்ளிக்கு மாறுவது என்பது எளிதாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போலி மதிப்பெண் சான்றிதழ்களை தடுக்க முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடையாள அட்டை குறித்து தெளிவுபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகள் தோறும் சிறப்பு பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்தை இன்று முதல் 3 நாட்களுக்கு நடத்த மத்திய அரசின் சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.