2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் நாளாக கருதி பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என கூறினார். மேலும் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 370 தொகுதிகளில் வெற்றி பெறும் இன்று உறுதியாக கூறி இருக்கிறார்.
தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பத்திரிகைகளும் கருத்துக்கணிப்புகளை தொடங்கியிருக்கிறது. 2024 ஆம் வருடத் தேர்தல் மற்றும் அதற்குப் பின்பான அரசியல் நிலவரங்கள் குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே நடத்தியது. மேலும் பிரதமர் மோடிக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் யார்.? என்பது தொடர்பாக மூட் ஆஃப் இந்தியா 2024 என்ற கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கிறது. கடந்த இரண்டு 40 தேர்தல்களிலும் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போதும் அவரை முன்னிறுத்தியே பாஜக போட்டியிடுகிறது.
எனினும் இனிவரும் காலங்களில் பிரதமர் மோடிக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்து இந்தியா டுடே சர்வே நடத்தியது. இந்த சர்வே 15 டிசம்பர் 2023 தொடங்கி 28 ஜனவரி 2024-ல் முடிவு பெற்றது. இந்தக் கருத்துக்கணிப்பில் 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் தனது முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது இந்தியா டுடே பத்திரிக்கை. இந்தக் கருத்துக் கணிப்புகளில் 28% பேர் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா அடுத்த பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மூளையாக செயல்படும் அவர் பிரதமர் மோடிக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் என மக்கள் தெரிவித்துள்ளனர். அமித் ஷாவிற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக 25% பேர் கருத்து கூறியிருக்கின்றனர். இரண்டு முறை உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் யோகி ஆதித்யநாத் அடுத்த பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் என தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நித்தின் கட்காரிக்கு வாய்ப்பிருப்பதாக 16% பேர் தெரிவித்துள்ளனர். நாக்பூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பாஜகவின் மூத்த தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற கட்சிகளுடனும் நல்ல நட்புறவை பேணி வரும் இவருக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.