பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தை எஸ்.எஸ்.ஸ்டான்லி தான் இயக்கியிருந்தார். அதேபோல், ஸ்ரீகாந்த் நடிப்பில் 2002-ல் வெளியான ஏப்ரல் மாதத்தில், 2006-ல் மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட திரைப்படங்களையும் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கியுள்ளார்.
பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் ராவணன், ஆண்டவன் கட்டளை, கடுகு, ஆன் தேவதை, சர்க்கார், மகாராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பு எஸ்.எஸ். ஸ்டான்லி இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். 12 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிறகு, ஏப்ரல் மாதத்தில் என்ற தனது முதல் படத்தைத் தயாரித்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.