நிஃபா வைரஸ் எதிரொலியாக புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் மாஹே பிராந்தியம் கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாஹே பிராந்தியத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாஹேவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் வரும் 24ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிராந்திய நிர்வாக அதிகாரி சிவ்ராஜ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், ”கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழப்புகளும் ஏற்படுவதால், புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் வரும் 24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடிகளை மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தேர்வுகளை மட்டும் திட்டமிட்டபடி நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது. உள்விளையாட்டு அரங்குகளையும் வ்ரும் 24ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளோம்.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பொது இடங்கள், கடைகளில் முக கவசம் அணிகிறார்களா என ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். நோய் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காவல்துறையினரும், பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்வதை கண்காணிக்க வேண்டும்” என சிவ்ராஜ் மீனா தெரிவித்துள்ளார்.