திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி நேற்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, ”மழை வெள்ளத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெல்லை வந்தடைந்தார். அவரோடு தமிழக நிதியமைச்சரும் சென்றார். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற போது, நிர்மலா சீதாராமன் அக்கறையோடு விசாரித்தது கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சகதியாக இருப்பதை தான். அங்கு இருக்கும் குருக்கள்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை விசாரித்தார். உண்டியலில் காசு போட வேண்டாம் என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். ஏனென்றால், அது அரசுக்கு போகுமாம். அனைவரும் ஜி.எஸ்.டி.யால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கில் அபராதம் போடுகிறார்கள் என மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இன்று வரை ஜி.எஸ்.டி.யால் கண்ணீர் சிந்தி வரும் நிலையை பார்க்கிறோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் பிரதிநிதியாக வந்த நிர்மலா சீதாராமனுக்கு குருக்கள்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதில் தான் அக்கறை. மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை. தமிழ்நாடு வழங்கிய வரி பணத்தை மத்திய அரசு வைத்துக்கொண்டு திருப்பி வழங்குவதில்லை” என்று சாடினார்.