பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர், இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்க நிதிஷ் குமார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அதை சாத்தியமாக்கினார். இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கூட அவர் நிறுத்தப்படலாம் என்று பேச்சுகள் அடிபட்டன. இப்படி இருக்கையில்தான் காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, இன்று அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.