மருத்துவர்கள் பிராண்டு மருந்துகளை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மருத்துவர்கள் பிராண்டு மருந்துகளை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். “ஒவ்வொரு RMPயும் (பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரும்) பொதுவான பெயர்களைப் பயன்படுத்தி மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் மற்றும் மருந்துகளை பகுத்தறிவுடன் பரிந்துரைக்க வேண்டும், தேவையற்ற மருந்துகள் மற்றும் பகுத்தறிவற்ற நிலையான-டோஸ் சேர்க்கை மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்” என்று விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் பெரும்பாலான மக்கள், தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காகவே செலவிடுகின்றனர். அந்தளவுக்கு மருந்து, மாத்திரைகளின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. மருந்துகளின் விலையைக் குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டவைதான் ஜெனரிக் மருந்துகளை (Generic Medicine) கட்டாயம் பரிந்துரைக்கும் நடைமுறை. ஒரு மருந்தை, அதன் மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது `ஜெனரிக்’ எனப்படுகிறது.
நாம் கடைகளில் வாங்கும் மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனம் ஒரு மருந்தை முதன்முதலில் கண்டுபிடித்தால், 20 ஆண்டுகள்வரை அந்த மருந்தை விற்பனை செய்ய முடியும். அந்த 20 ஆண்டுகள் முடிந்த பிறகு, அது பொதுவான மருந்தாகிறது. அதன்பின் அந்த மருந்தை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து விற்பனை செய்யலாம். அப்படி விற்பனை செய்யும் மருந்துகள்தான் `ஜெனரிக் மருந்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கான ‘லைசென்ஸ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் சுகாதாரத்திற்கான செலவில் பெரும் பகுதியை மக்கள் மருந்து, மாத்திரைகளுக்காகச் செலவிடுகின்றனர். இதைக் குறைக்க, மக்களுக்கு ஜெனரிக் மருந்துகளையே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். பிராண்டடு மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் 30 முதல் 80 சதவிகிதம் வரை விலை மலிவானவை. எனவே ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைப்பதன் மூலம் மக்களின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கலாம். இதன்மூலம் அதிகளவு டோஸ் உள்ள மாத்திரைகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம். இதை மீறுவோருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும்.
அதன் பிறகு பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு உத்தரவிடப்படும். அதையும் மீறித் தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், டாக்டராக பணியாற்றுவதற்கான லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். காப்புரிமை இல்லாமல் விற்கப்படும் மருந்துகளைப் பரிந்துரை செய்யக்கூடாது. மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.