பொங்கலுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடங்கி வைக்கிறார்கள்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, தலா 1.75 கோடி வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆர்டர் வழங்கியுள்ளது. ஆனால், வழக்கமாக 6 மாதங்களுக்கு முன்பு ஆர்டர் வழங்குவதற்கு பதிலாக, தற்போது 3 மாத அவகாசமே கொடுக்கப்பட்டதால், பொங்கலுக்குள் முழு உற்பத்தி சாத்தியமில்லை என ஈரோடு மாவட்ட நெசவாளர்கள் தெரிவித்தனர். இதுவரை, 27% வேட்டிகள், 40% சேலைகள் மட்டுமே தயாராகி இருப்பதாகவும், தொடக்கத்தில் தரமில்லாத நூல்களை வழங்கியதால் உற்பத்தி மேலும் தாமதமானதாகவும் நெசவாளர்கள் கூறியுள்ளனர்.