நாய் இறைச்சி இறக்குமதி, வர்த்தகம் மற்றும் விற்பனைக்கு தடை விதித்த நாகலாந்து அரசின் உத்தரவை கவுஹாத்தி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாகலாந்தில் நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை பைகளில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு வைரலானது. இதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நாகாலாந்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி முதல் நாய் மற்றும் நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க நாகாலாந்து அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால் அந்த உத்தரவுக்கு 2020ஆம் நவம்பர் மாதம் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் நாய் இறைச்சி இறக்குமதி, வர்த்தகம் மற்றும் விற்பனைக்கு தடை விதித்த அரசின் உத்தரவு செல்லாது என்று கவுஹாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
‘மிருகங்கள்’ என்ற வரையறையின் கீழ் நாய்கள் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டிய நீதிபதி, வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் மட்டுமே நாய்களின் இறைச்சி உட்கொள்ளப்படுவதால் இது ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறினார்.