பிரபல இயக்குனர் பாரதிராஜா, தமிழ் திரைத்துறைக்கு பல்வேறு திறமைமிக்க நடிகர், நடிகைகளை வழங்கிய பெருமைக்குரியவர். அவருக்கு மனோஜ் பாரதிராஜா என்ற மகனும் ஜனனி என்ற மகளும் உள்ளனர். இவர் 1999-ல் தான் இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தன்னுடைய மகனான மனோஜ் பாரதிராஜாவை ஹீரோவாக்கி அழகு பார்த்தார்.
இந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது, குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்கள் மக்களை மிகவும் கவர்ந்தன. பின்னர், மனோஜ் பாரதிராஜா சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் நடித்தாலும் பெரிதாக கவனம் பெற முடியவில்லை. அதன் பின்னர், ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு சாதுர்யன் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை நந்தனாவை திருமணம் செய்துகொண்டார். மனோஜ் – நந்தனா ஜோடிக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த மனோஜ் பாரதிராஜா, அண்மை தினங்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று மாலை 6 மணியளவில் திடீரென நிலைமை மோசமானதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
அவரது உடல் தற்போது சென்னை சேத்துப்பட்டிலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகரும் தனது மகனுமான மனோஜ் மறைந்த செய்திகேட்டு வீட்டுக்கு காரில் வந்துள்ளார் பாரதிராஜா. அப்போது மகனின் மறைவு காரணமாக கண் கலங்கியபடியே சோகத்துடன் காணப்பட்டார். “எந்த தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது”. 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More: இளையராஜா முதல் அண்ணாமலை வரை..! மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்…!