medicine: மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஏப்ரல் 2024 முதல் மருந்துகளின் விலை 12 சதவீதம் வரை கணிசமான அளவில் உயரும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்த்தப்படும் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகள் தவறானவை, உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (டி.பி.சி.ஓ) 2013 விதிகளின்படி, மருந்துகள் அட்டவணைப்படுத்தப்பட்டவை மற்றும் அட்டவணையிடப்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன. மொத்த விலை குறியீட்டு எண் காரணியான (+) 0.00551% அடிப்படையில், 782 மருந்துகளுக்கான தற்போதைய உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதுள்ள உச்சவரம்பு விலை 31.03.2025 வரை தொடரும்.
ரூ.90 முதல் ரூ.261 வரையிலான உச்சவரம்பு விலையில் 54 மருந்துகளுக்கு ரூ.0.01 (ஒரு பைசா) என்ற சிறிய அளவு விலை உயர்வு இருக்கும். அனுமதிக்கப்பட்ட விலை உயர்வு சிறியது என்பதால், நிறுவனங்கள் இந்த உயர்வைப் பெறலாம் அல்லது பெறாமல் போகலாம். எனவே, 2024-25 நிதியாண்டில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மருந்துகளின் உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது. திருத்தப்பட்ட விலைகள் 2024 ஏப்ரல் 1 முதல் அமலாகும். இதன் விவரம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளத்தில் www.nppaindia.nic.in கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Readmore: இயல்பு நிலைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்!… ஒரே ஆண்டில் 2 முறை முடக்கம்!