திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணோ பெண்ணோ தங்கள் நண்பர்களுடன் ‘ஆபாசமான’ உரையாடல்களில் ஈடுபட கூடாது என்றும், எந்த கணவனும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற உரையாடல்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
குடும்ப நீதிமன்றம் ஆணுக்கு எதிரான கொடுமையின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கிய நிலையில், இதனை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் நீதிபதி கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடும்ப நீதிமன்றம் கொடுத்த அதே தீர்ப்பை உறுதி செய்தனர்
எந்தவொரு கணவரும் தனது மனைவி மொபைல் மூலம் இந்த வகையான ஆபாசமான உரையாடலை செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டார், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“திருமணத்திற்குப் பிறகு, கணவன் மனைவி இருவருக்கும் மொபைல், அரட்டை மற்றும் பிற வழிகளில் நண்பர்களுடன் உரையாட சுதந்திரம் உள்ளது, ஆனால் உரையாடலின் அளவு ஒழுக்கமானதாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும், குறிப்பாக எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது, இது வாழ்க்கைத் துணைக்கு ஆட்சேபனைக்குரியதாக இருக்கக்கூடாது,” என்றும் தெரிவித்தனர்
ஒரு துணை மற்றொருவரின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி மனரீதியான கொடுமைக்கு சமம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..
இந்த ஜோடி 2018 இல் திருமணம் செய்து கொண்டது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் “தனது பழைய காதலர்களுடன் தனது மொபைலில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று கணவர் புகார் அளித்திருந்தார். மேலும் வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆபாசமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், அந்தப் பெண் தனக்கு அத்தகைய உறவு இல்லை என்று கூறி கணவரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். தனது கணவர் தனது மொபைல் போனை ஹேக் செய்து, தனக்கு எதிராக ஆதாரங்களை உருவாக்க அந்த செய்திகளை இரண்டு ஆண்களுக்கு அனுப்பியதாகவும் மனைவி கூறியிருந்தார். .
மேலும், தனது கணவரின் செயல்கள் தனது தனியுரிமையை மீறுவதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். தனது கணவர் ரூ.25 லட்சம் வரதட்சணை கேட்டதாகவும் மனைவி குற்றம்சாட்டி இருந்தார்.
இருப்பினும், அந்த ஆணின் குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அந்தப் பெண்ணின் தந்தையும் தனது மகள் தனது ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக சாட்சியமளித்தார். எனவே, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.