சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அண்மையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
ஆனால், ஒரு பக்கம் சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் வெடிக்கிறது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பதை தவிர்க்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்தே தென் மாவட்டம் செல்லும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.