மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டு, என்னை விளக்கம் அளிக்க கூட அனுமதிக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறியதில்லை. திமுக எம்.பி.க்களும் கூறியது இல்லை. எனவே, தமிழ்நாடு, மும்மொழிக் கொள்கையை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. இதனால், அதை ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டுமென முதல்வர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எனவே, எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ்உடனடியாக நிதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தர்மேந்திர பிரதான் பேசியது என்ன..?
நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ”தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றனர். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையில் திமுக தலைமையிலான அரசு திடீரென தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. அவர்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். திமுகவினரின் நிலைப்பாடு “நாகரிகமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது” என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்பி கண்டனம் தெரிவித்த நிலையில், தான் பேசியது புண்படுத்தி இருந்தால், அந்த கருத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Read More : மதுபான ஊழல்.. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..