நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, போட்டியும் இல்லை . ஆனால், 2026 சட்டமன்றத்தில் போட்டியிடுவோம் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ”ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியல் என்பது பெருங்கடல், மிகப்பெரிய சமுத்திரம். அதில், நீந்தி கரை சேர்பவர்களும் இருப்பார்கள், மூழ்கி போகிறவர்களும் இருப்பார்கள். விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கி போகிறாரா என்று பார்க்கலாம். அதை தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். இதனால் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் தான் இறுதி எஜமானவர்கள். இருப்பினும், யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக ஓட்டுகளில் யாரும் கை வைக்க முடியாது. விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்தால் அது அவங்களுக்கு வீழ்ச்சியாக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.