அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவும் தேர்தலை சந்திக்க அதிரடியாக தயாராகி வருகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளும் முன்வந்துள்ளன.
இந்த கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தோழமை கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி பதவிகளிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய அவர், “அதிமுக எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் இனி கூட்டணி வைக்காது. இதை சிறுபான்மை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நமக்கு யார் தயவும் தேவையில்லை. நாம் பார்க்காத வெற்றி இல்லை. இன்றைய நிலை மாறும். அதிமுக ஆட்சி கட்டிலில் அமரும்” என்று தெரிவித்தார்.