கேரளாவில், ரேஷன் கடைகள் வாயிலாக, 10 ரூபாய்க்கு, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விற்பனையை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைக்க, 2020ல் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த திலோத்தமன் வலியுறுத்தினார். ஆனால், தனியார் நிறுவனங்கள் விலையை குறைக்க மறுத்தன. இதை தொடர்ந்து, ரேஷன் கடைகள் வாயிலாக சுத்தமான குடிநீரை லிட்டர், 11 ரூபாய்க்கு விற்பனை செய்ய 2020ல் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ரேஷன் கடைகளில், 1 லிட்டர் குடிநீர் பாட்டிலை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை கேரள அரசு தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளது.
ரேஷன் பொருட்கள் வாங்குவோர் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் இங்கு குடிநீர் பாட்டில்கள் வாங்கி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. ‘ஹில்லி அக்வா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குடிநீரை, கேரள நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான, கேரள நீர்ப்பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தயாரிக்கிறது. இது, கடைகளுக்கு லிட்டருக்கு 8 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. விற்பனை செய்வோருக்கு 2 ரூபாய் கமிஷன் வழங்கப்படும். சபரிமலைக்கு பக்தர்கள் வரும் காலம் என்பதால், முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனை துவங்கி உள்ளது. வெளி சந்தையில் இந்த குடிநீர் பாட்டில் லிட்டருக்கு, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.