தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வாகனம், அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.
புதிய விதி: அந்த வகையில் தமிழ்நாடு சாலை விதிகளில் பல நாட்களாக மக்கள் வைத்த கோரிக்கை ஒன்றிற்கு போக்குவரத்துத்துறை செவி சாய்த்து உள்ளது. முன்பெல்லாம் உங்கள் பைக்கை உங்கள் நண்பர் எடுத்து செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி எடுத்து செல்லும் பட்சத்தில் அவர் ஹெல்மெட் போடாமல் விதியை மீறினால்.. உங்களின் வண்டி ஆர்சி புக் நம்பருக்கு அபராதம் போடப்படும். பெரும்பாலான நேரங்களில் டிரைவரின் லைசன்ஸ் நம்பருக்கு அபராதம் போடாமல் ஆர்சி புக் நம்பருக்கு அபராதம் போடுவார்கள்.
ஆனால், இனி விதிமீறல் புகார்களுக்கு டிரைவர் மீதுதான் பைன் போடப்படும். ஒருவேளை.. உங்கள் நண்பர்.. உங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று சிக்னலை மதிக்காமல் செல்கிறார். வண்டி நிற்காமல் போகும் பட்சத்தில் வண்டி நம்பரை வைத்து டிராபிக் போலீஸ் உங்கள் வண்டி மீது பைன் போடுவார். ஏனென்றால், டிரைவர் நிற்காத காரணத்தால் அவரின் விவரங்களை போலீஸ் எடுக்க முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் அபராதம் செலுத்த செல்லும் போது.. வண்டியை நீங்கள் ஓட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை காட்டினால் வண்டி மீதான அபராதம் நீக்கப்பட்டு அதை ஓட்டிய உங்கள் நண்பர்.. அதாவது டிரைவர் மீது புதிய அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சில கவனிக்க வேண்டிய விதிகள்: இது போக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் அதற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். ரிஜிஸ்டிரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.