உருளை கிழங்கிற்கு மாற்றாக கொடி உருளை’ அல்லது ஏர் பொட்டேட்டோ என்று சொல்லப்படும் காவளிக் கிழங்கில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிழங்கு என்றாலே, வாயுத் தொல்லைக்குப் பயந்து, அதனை சமையலில் அதிகம் சேர்ப்பது கிடையாது. இந்தநிலையில், கிழங்கு வகைகளுக்கு மாற்றாக வரப்பிரசாதமாக கிடைத்த கிழங்கு ஒன்று தான் காவளிக்கிழங்கு. ஏனெனில், இது மண்ணுக்குக் கீழே காய்ப்பதில்லை. இத்தகைய பாரம்பரியப் பெருமை மிக்க இக்கிழங்கை, விவசாயிகள் பலருமே மறந்து போய்விட்ட சூழலில், இயற்கை விவசாயிகள் சிலர் இன்னமும் சாகுபடி செய்து பாதுகாத்து வருகிறார்கள்.
உருளை கிழங்கிற்கு மாற்றாக நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட உணவுப்பொருட்களைத்தான் பயிர்செய்து வந்தார்கள். ஆண்டு முழுவதும் அவர்களின் உணவுத்தேவையை வீட்டுக் கொல்லைப்புறத்தில் இருந்து கிடைப்பவற்றை வைத்தே பூர்த்தி செய்து விடுவார்கள். அந்தவகையில், புடலை, அவரை, வெண்டி, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகல், கொத்தவரை, துவரை, கடலை என அனைத்தையும் வீட்டைச் சுற்றியே சாகுபடி செய்து விடுவார்கள். அந்த வகையில், மலைப்பிரதேசங்களில் விளையும் உருளைக்கிழங்குக்கு மாற்றாக சமவெளிப் பகுதிகளில் விளைய வைத்து வந்த கிழங்குதான் இந்த காவளிக் கிழங்கு.
இந்த அனைத்துக் கிழங்குகளுக்கும் விதைப்பதைத் தவிர வேறு செலவுகளே இல்லை. கிழங்கு முளைத்து, கொடி வெளியில் வந்ததும் அருகில் உள்ள மரத்தில் ஏற்றி விட்டால் போதும். பூச்சித்தாக்குதல் கிடையாது. மரத்தோடு சேர்ந்து, தன் உணவை, தானே தயாரித்துக் கொள்ளும். அதனால் உரச் செலவும் கிடையாது. ஆடு, மாடுகளும் சாப்பிடுவதில்லை. இந்தக் கிழங்கை உணவுக்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விதைக்காக தனியாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இது வாயுத் தொந்தரவு, சர்க்கரை பிரச்னை என எதையும் உண்டு பண்ணாது. மார்கழி கடைசி அறுவடைக்கு வரும் காவளிக்கிழங்கை, அப்படியே பறித்துப் போட்டு வைத்து விட்டால், அடுத்த ஆடி மாதம் வரை அப்படியே இருக்கும். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாத்தாலே போதுமானது. உருளைக்கிழங்கில் என்னென்ன கறி சமைக்கிறோமோ… அத்தனையையும் இதில் செய்யலாம். அதே சுவை இருக்கும்.
உண்மையிலேயே இதைத்தான் ‘ஜீரோ பட்ஜெட்’ என்று சொல்ல வேண்டும். இதற்காக எந்தச் செலவும் தேவையில்லை. ஒரே ஒரு கிழங்கை மட்டும் வாங்கி, மண்ணில் பதித்து வைத்தால், அது முளைத்து கொடியாகி, அதில் ஐம்பது கிழங்குகள் வரையிலும் காய்க்கும். முதலில் காய்க்கும் காய் ஒரு கிலோ அளவுக்கு எடை வரும். அடுத்து வரும் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்து கொண்டே வரும். கடைசியாக காய்க்கும் காய் வெறும் ஒரு கிராம், இரண்டு கிராம் எடையில்தான் இருக்கும். ஆடி மாதத்தில் இவை முளைக்கத் தகுந்த தட்பவெப்பம் நிலவுவதால், தானாகவே முளைத்து குருத்து வந்துவிடும். அந்தப் பருவத்தில் மரப்பயிர்களின் அருகில், இந்தக் கிழங்குகளை விதைத்துவிட வேண்டும். இதில் பூ பூப்பதில்லை. நேரடியாகக் காய் காய்த்துவிடும். ஐம்பது நாளில் முதல் காய் கிடைக்கும்.