நிலம் மற்றும் இடத்தை வாங்கி, பத்திரப்பதிவு செய்வோர் நில அளவை சரியாக இருக்கிறதா..? என்பதை உறுதி செய்து பட்டா வழங்க வேண்டும். நில அளவையில் தவறு நடந்தால், அது காலத்திற்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, நில அளவை விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.
இந்நிலையில் தான், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை இணையளம் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம். தற்போது இந்த சேவையை அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களின் 4 எல்லைகளை அளவை செய்வதற்கு பொது சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
நில அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் நில அளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். இதை https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மனுதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.