மாவோயிட்டுகளை முற்றிலும் ஒழிக்க சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைகள் சந்திக்கும் மலைப் பகுதியை 10,000 பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.
சத்தீஸ்கர், தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்ட் ஒழிப்புக்காக தெலங்கானா காவல்துறையில் க்ரேஹவுண்ட் என்ற சிறப்பு படையும், மகாராஷ்டிராவில் சி-60 கமாண்டோ பிரிவும், சத்தீஸ்கரில் டிஆர்ஜி என்ற சிறப்பு படையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர மத்திய அரசின் சிஆர்பிஎப் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் 300 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தான், பஹல்காம் தாக்குதலை அடுத்து, மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு முற்றிலும் முடிவு கட்டுவதற்காக பாதுகாப்பு படைகளை சேர்ந்த 10,000 வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கரேகட்டா, நட்பள்ளி மற்றும் புஜாரி கன்கெர் வனப்பகுதிகளை சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர்.
நக்சல் பட்டாலியன் எண்.1 படையை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படையில்தான் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் ஹித்மா, தாமோதர், தேவா மற்றும் விகாஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் மலைப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர். மேலும், மாவோயிஸ்டுகள் தப்பிச் செல்லாத வகையில் மலைப் பகுதிகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளும் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் வேட்டையின்போது, 3 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களிடம் தற்போது குறைந்த அளவிலேயே உணவு, தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு உணவுப் பொருட்கள் செல்லும் பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர். ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது நக்சல் ஒழிப்பில் இறுதியான நடவடிக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வேட்டையில் மாவோயிஸ்டகளுக்கு இரண்டே வழிகள் தான் இருக்கிறது. சரணடைவது அல்லது துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பது ஆகிய வழிகள் மட்டுமே உள்ளன.